கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாகவும், பணம் செலுத்தினால் வேலை கிடைக்கும் எனவும் குறுந்தகவல் வந்தது. அதனை நம்பி ராம்குமார் குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து அதிலிருந்து வேலையை முடித்த பிறகு அவர் செலுத்திய பணத்தை விட இரண்டு மடங்கு பணம் திரும்ப கிடைத்தது.

அதன் பிறகு அவர் முதலீடு செய்த ஒரு லட்ச ரூபாய் பணம் திரும்ப வரவில்லை. இதனால் தான் செலுத்திய பணத்தை எப்படியாவது திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 3-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை ராம்குமார் 30 லட்சத்து 434 ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் பணம் எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராம்குமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.