சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் (Bilaspur) உள்ள அடல் ஆவாஸ் காலனியில், கணவன்-மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், கொலை-தற்கொலை (Murder-Suicide) எனச் சந்தேகிக்கப்படும் பரபரப்பான வழக்காக மாறியுள்ளது. காரணம், அந்த வீட்டில் உள்ள சுவரில் லிப்ஸ்டிக் மூலம் எழுதப்பட்டிருந்த ரகசியச் செய்திகள் ஆகும்.
பத்து ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ராஜ் தாம்பே, ஷிவானி தாம்பே (எ) நேஹா ஆகியோர், தனியார் நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களின் சடலங்கள் திங்கட்கிழமை அன்று அவர்களின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. படுக்கையில் ஷிவானியின் உடலும், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜின் உடலும் கிடந்தது.
ஆனால், சுவரில் லிப்ஸ்டிக் மூலம் எழுதப்பட்டிருந்த செய்திகள்தான் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அதில், ‘ராஜேஷ் விஸ்வாஸ் என்பவரே எங்கள் திருமண வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார், அவர் காரணமாகவே நாங்கள் இறக்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், ஷிவானியின் கழுத்தில் காயங்கள் இருந்ததாலும், கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாலும், ராஜ் முதலில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
