உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் (Dehradun) சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு வங்கதேசப் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் பப்ளி காத்துன் என்ற பெண், ‘பூமி சர்மா’ என்ற போலியான அடையாளத்துடன் வசித்ததுடன், டேராடூனைச் சேர்ந்த ஒரு இந்து இளைஞரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று (Corona Period) காலத்தில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வந்த பப்ளி காத்துன், 2021 ஆம் ஆண்டில் டேராடூனுக்கு வந்துள்ளார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றபோதிலும், 2022 இல் டேராடூனைச் சேர்ந்த இந்து இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, போலியான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய ஆவணங்களைப் பெற்றுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் வந்து, கூலி வேலை செய்து வந்த பாபி காத்துன் என்ற மற்றொரு வங்கதேசப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்ததற்காக இந்த இரண்டு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்று சட்டவிரோதமாக வசிப்பவர்களைக் கண்டறியும் ‘ஆபரேஷன் கால்னேமி’ என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 17 வங்கதேசத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
