கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தில் கணேசன்(60) என்பவர் விசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(50) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேசன் தோசை சுட்டு தருமாறு தனது மனைவியிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் மாதம்மாள் மூன்று தோசைகள் சுட்டு கொடுத்துவிட்டு கியாஸ் தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அப்போது கணேசன் தனக்கு மேலும் 3 தோசைகள் வேண்டும் என கேட்டதற்கு மாதம்மாள் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதால் இனிமேல் தோசை சுட முடியாது என கூறினார். அதற்கு விறகு அடுப்பில் தோசை சுட்டு தா என கணேசன் கேட்டார். அப்போது மாதம்மாள் இப்போதுதான் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தேன், என்னால் சுட்டு தர முடியாது என கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கணேசன் தனது மனைவியை சரமாரியாக தாக்கி, கத்தியால் அவரது தலை, கையில் வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மருமகள் விஜயலட்சுமி, 2 வயதுடைய பேத்தி தனிஷா ஆகியோருக்கும் கத்திவெட்டு விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மாதம்மாள், விஜயலட்சுமி, தனிஷா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.