கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று கம்பளம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கல்லூரி மாணவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, அனுமதி இன்றி பொது இடத்தில் சாகசம் செய்த கல்லூரி மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்து போலீசார் 8000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.