கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் ‘தமிழக வெற்றிக் கழக’ (தவெக) நிர்வாகிகள் பங்கேற்றபோது, ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, தவெக தொண்டர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி முழக்கமிட்டதால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவத்தைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களுடனும் தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைப் பணி செய்ய விடாமல் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
தவெக சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சித் தொண்டர்களின் இத்தகைய நடவடிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
