கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை – தாம்பரம் இடையேயும், திங்கட்கிழமை தோறும் தாம்பரம் – நெல்லை இடையேயும் இயங்கியது.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், ஜனவரி மாதத்துடன் இந்த வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 5 மாதங்கள் மட்டும் இயக்கபட்ட இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை பற்றி ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தெற்கு ரெயில்வே, இந்த ரயில் மூலம் மொத்தம் 33 ஆயிரத்து 517 பேர் பயணம் செய்து உள்ளனர் என்றும் சுமார் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றும் பதில் அளித்தது. இதனால்  இந்த சிறப்பு ரெயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை பற்றி பாண்டியராஜா கூறியுள்ளதாவது, “பயணிகளிடையே இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு நல்ல வரவேற்பு மற்றும் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரெயில்வேக்கும் கணிசமான வருமானம்  கிடைத்தது. எனவே நிறுத்தப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க தென்னக ரெயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.