சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின் வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சென்னை அமைந்தகரை, அய்யாவு காலனியில் வசிக்கும் சாகித்யன் (23) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சில நபர்கள் சாகித்யனிடம் தகராறு செய்துள்ளனர். பின் தகராறு முற்றியதில் அவரை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாகித்யன், அந்த வழியாக நடந்து சென்ற போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.