திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் நான் கேட்கும் பணத்தை தந்தால் அரசு வேலை வாங்கி தருகிறேன் என சூரியகுமாரி கூறியுள்ளார். இதனை நம்பி தனக்கும், தனது நண்பர்களுக்கும் வேலை வாங்கி தருமாறு கூறி ஆனந்த் மொத்தம் 47 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை சூரியகுமாரியிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சூரியகுமாரி பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் விசாரித்த போது அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆனந்த் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சூரியகுமாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை செல்வத்தையும் அதிரடியாக கைது செய்தனர்.