உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பிலிருந்திலிருந்து விரைவாக மீண்டு உள்ளதாக பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை அவர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த ஆய்வு அறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2023-24 ஆண்டில் 6-லிருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே கடந்த 2021 22ஆம் ஆண்டில் 8.7 சதவீதமாகவும் நடப்பு நிதி ஆண்டில் 7 சதவீதமாகவும் இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து விளங்கும் என்றும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு விட்டதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.