மும்பை அருகே தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாத் மற்றும் அம்பிவாலி ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று நடந்த சம்பவத்தில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கவுரவ் நிகம் என்ற 16 வயது இளைஞர், தனது கைபேசியை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்ற வேளையில் சமநிலை இழந்து ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இரு கால்களும்  காயமடைந்துள்ளதோடு, ஒரு கால் முற்றிலும் நசுங்கியுள்ளது.

கவுரவ் நிகம் கதவு அருகில்  அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் கையை இழுத்து மொபைலை பறித்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே சமநிலை இழந்த அவர் கீழே விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்யாண் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2023 முதல் 2025 மே மாதம் வரை 26,000-க்கும் மேற்பட்ட கைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக அரசு ரயில்வே காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான திருடர்களும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் கட்டமைக்கப்பட்ட கும்பல்களாகவே செயல்படுகின்றனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.