விளையாட்டில் கடைசி நொடி வரை கவனமும் உழைப்பும் முக்கியம் என்பதை ஒரு சைக்கிள் பந்தய வீரரின் வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. முன்கூட்டியே வெற்றி உறுதி என நினைத்து கொண்டாடத் தொடங்கினால், தோல்வி கதவைத் தட்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு பாடம்.
செப்டம்பர் 20 அன்று @InsaneRealitys என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட 21 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, 22,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. “முன்கூட்டியே கொண்டாட வேண்டாம், வாழ்க்கை எப்போதும் உங்களை பணிவாக்கக் காத்திருக்கிறது” என்று இந்த வீடியோவின் தலைப்பு எச்சரிக்கை விடுக்கிறது.
வீடியோவில், ஒரு சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் தீவிரமாகப் போட்டியிடுகின்றனர். ஒரு வீரர் மற்றவர்களைப் பின்னுக்கு தள்ளி, முன்னிலை பெற்று, வெற்றி உறுதி என நம்பி, முடிவுக் கோட்டுக்கு அருகில் உற்சாகத்தில் கொண்டாடத் தொடங்குகிறார். ஆனால், அந்த மகிழ்ச்சியில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால், மற்ற வீரர்கள் அவரை முந்தி, அவர் வெற்றியை இழக்கிறார்.
இறுதியில், அவர் கடைசி இடத்திற்கு கூட வர முடியாமல் தோல்வியடைகிறார். இணையவாசிகள் இதைப் பார்த்து, “அதிக நம்பிக்கையால் வந்த வினை!” என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, “வெற்றியை முன்கூட்டியே கொண்டாடியதால் தோல்வியைத் தழுவினார்!” என மற்றொருவர் கிண்டலடித்தார். “முடிவுக் கோட்டைத் தாண்டிய பின்பே வெற்றி உறுதி” என இந்த வீடியோவைப் பார்த்த பலர் பாடம் கற்றனர்.
