மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று(பிப்,.15) 10 ஆம் வகுப்பு ஓவியத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று 12ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வு இன்று நடக்க உள்ளது. எனினும் 10-ம் வகுப்புக்கான முக்கிய பாடத்தேர்வுகள் பிப்,.27 ஆம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பின் முதல் முதன்மை தேர்வு ஆங்கிலம் முக்கிய பாடமாக இருக்கும்.

12-ம் வகுப்புக்கான முதன்மைத்தேர்வு பிப்ரவரி 24ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் 12ஆம் வகுப்புக்கான ஆங்கில பாடத்தேர்வும் நடைபெறும். இருதரப்பு மாணவர்களுக்கும் காலை 10:30 மணிக்கு துவங்கி பகல் 12:30 வரை தேர்வு நடைபெற உள்ளது. அதேபோன்று சில தேர்வுகள் 1:30 மணி வரை நடத்தப்படும் எனவும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று நடைபெறும் 10ம் வகுப்பு ஓவியப் பாடத்தேர்வில் சுமார் 4000 மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோன்று 12-ம் வகுப்புக்கான தொழில்முனைவு பாடத்தேர்வில் 1643 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டும் மொத்தம் 21,86,940 பேர் தேர்வு எழுதுகின்றனர். 12 ஆம் வகுப்பு பொறுத்தவரை மொத்தம் 16,96,770 பேர் தேர்வு எழுதுகின்றனர்.