கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிக்பஜார் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரேம்குமார் கார் டிரைவராக இருக்கிறார். இவரது உறவினர்கள் சோலார் முத்துகவுண்டன் பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அவர்களை பிரேம்குமார் அழைத்து வருவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கவுண்டம்பாளையம் ரிங் ரோடு வளைவில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் பிரேம்குமாரின் கார் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் பிரேம்குமார், மற்றொரு காரில் வந்த ராஜேந்திரன், அவரது அக்காள் வளர்மதி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேம்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திரனுக்கும், வளர்மதிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.