தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக மற்றும் திமுக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, தற்போது திமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் வழங்க திமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் விருப்பப்படியே இந்த மெகா கூட்டணி அமைந்துள்ளதாகப் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் தேமுதிக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், தேமுதிக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் வேளையில், தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
