இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே சகோதரர்கள் சில மாதங்களுக்கு முன்பாக தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில், அந்நாட்டின் அதிபர்களாக இருந்த கோட்டபாய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உட்பட நான்கு நபர்கள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு தடை விதிப்பதாக கனடா அறிவித்திருக்கிறது. மேலும், தங்கள் நாட்டில் இருக்கும் அவர்களின் சொத்துக்களும் நிதி செயல்பாடுகளும் முடக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.
கனடா அரசு, விடுதலை புலிகளை குறிவைத்து நடந்த போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி இவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.