இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும் போக்குவரத்து மந்திரியான பந்துல குணவர்த்தனே, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, இலங்கை கருவூலம் கடும் நிதி பற்றாக்குறையில் இருக்கிறது.
எனவே, பட்ஜெட்டில் அமைச்சகம் ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கி வைக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீதம் செலவீனங்களை குறைக்குமாறு அதிபர் மந்திரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் நிதி நெருக்கடி மோசமாக இருக்கிறது. இந்த வருடத்திலிருந்து, சில மாதங்களில் வரிகளின் மூலமாக வருவாய் கிடைக்கும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் வரிகள் குறைவாகவே கிடைக்கும் என்று தோன்றுகிறது. இம்மாதம் மற்றும் அடுத்த மாதத்தில், அரசாங்க பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.