கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் 5ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஷர்மிளா மற்றும் சித்தப்பா முகமது தாஹா வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரை பெற்றுக் கொண்ட வில்லியனூர் பெண் இன்ஸ்பெக்டர் சரண்யா பல மணி நேரம் காலம் தாழ்த்தி விசாரணையை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையில் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தந்தை முகமது ரபீக் மறுநாள் ஜூன் 6ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து தனது மனைவி அளித்த புகாரின் நகலை தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது எஸ்ஐ சரண்யாவிற்கும், முகமது ரஃபீக் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தகாத வார்த்தைகளால் சரண்யா திட்டி அனுப்பியுள்ளார். இதனிடையில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞரின் செல்ஃபோன் சிக்னல்கள் கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் அதனை தொடர்ந்து அசாமிலும் கண்டறியப்பட்டது.
அதனை கண்டறிந்த எஸ்ஐ சரண்யா சிறுமியை தேடி செல்ல வேண்டும் எனில் பணம் வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்டுள்ளார் இதை அடுத்து விசாரணைக்காக அசாம் சென்ற சரண்யாவிற்கு முகமது ரபீக் ஜிபே மூலம் ரூபாய் 5000 பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் எஸ்ஐ சரண்யா மீது புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் முகமது ரஃபிக் தனது மகளை கண்டுபிடிக்க லஞ்சம் வாங்கியதாக புகார் அளித்தார்.
அதனால் எஸ்ஐ சரண்யாவின் கணவர் பாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு அந்த 5000 ரூபாய் பணத்தை மீண்டும் முகமது ரஃபி கின் ஜிபேவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் மீது சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் பின் டிஜிபி ஷாலினி சிங்க் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய எஸ்ஐ சரண்யாவை பதவி நீக்கம் செய்தார். மேலும் அவரது கணவர் பிரபுவை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
