இந்தூர் நகரில், குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், தனது தொழில்தொடர்பான பயணத்தில் சுமார் 4 கிலோ 800 கிராம் தங்க நகைகளை காரில் வைத்து  ஓட்டுநருடன் நிறுத்தி விட்டு ஹோட்டலுக்குள் சென்றிருந்தார். அதே நேரத்தில், அவரின் ஓட்டுநர் மஸ்ரூ ரபாரி அந்த காருடன் நகைகளையும் எடுத்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி 80 லட்சம் ஆகும்.

தகவலின்படி, தர்மேந்திர பாய் என்ற நகைக்கடைக்காரர் தனது ஊழியர் சௌரப்புடன் அகமதாபாத்திலிருந்து இந்தூருக்குச் சென்றிருந்தார். இரவு நேரமாகிவிட்டதால், ஷிவானி ஹோட்டலில் தங்க முடிவெடுத்தனர்.

ஹோட்டலில் உள்ளே செல்லும் முன், ஓட்டுநருக்கு காரை கவனிக்கச் சொல்லிவிட்டு சென்றுவிட்ட நிலையில், சௌரப் திரும்பி வந்தபோது கார் காணவில்லை என்பது தெரியவந்தது. அவருடைய மொபைல் எண்ணும் அணைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

பல முயற்சிகளுக்குப் பிறகு, தொழிலதிபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தற்போது மஸ்ரூ ரபாரி மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இந்தூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.