கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை 6 மணியளவில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நவீன கருவி மூலம் ஓட்டுநர்கள், குடிபோதையில் உள்ளனரா? என்று  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 ஓட்டுநர்கள் குடிபோதையில் பணிக்கு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. பின் இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 ஓட்டுனர்களின்  உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிலர் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பின், நன்றாக குடித்து, மறுநாள் காலையில் போதையிலேயே பணிக்கு வருகின்றனர்.இதனால் பேருந்து ஓட்டுநர்களை நம்பி ஒரு பேருந்தில் சுமார் 40 பேர் மட்டுமே பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இது போன்று தொடர்ந்து திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் . எனவே குடித்துவிட்டு பணிக்கு வந்தால் நிரந்தரமாக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.