சென்னை மாநகரில் உள்ள வில்லிவாக்கம் ஏரி சுமார் 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ரூ.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியின் “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியின் நடுவே சுமார் 650 மீட்டர் நீளம் மற்றும் 1 மீட்டர் அகலம் கொண்ட தொங்கு பாலம் அமைக்கப்பட்டு, அதில் 100 மீட்டர் பாதை கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8  கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் நடக்கும்போது திகில் அனுபவமும், கண்ணாடி வழியே ஏரியின் அழகை வர்ணிக்கும் வகையில்  பார்த்து செல்லலாம். மேலும் பசுமையை போற்றும் விதத்தில் அழகிய செடி, கொடி, மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை இன்னும் அழகூட்டும் விதத்தில் இரவையே பகலாக்கும் வகையில், வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் தொங்குபாலம் வண்ண விளக்குகளால் அழகாக தெரியும்.

இதேபோல் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நீர் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள், ராட்டினம், படகு, சவாரி என்று தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு நிகரான “தீம் பார்க்” ஒன்றும் அமைய உள்ளது. இந்நிலையில் பாடி மேம்பாலம் வழியே நடந்து செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொங்கு நடைபாலம் அமைகிறது. எனவே மக்கள் இந்தப் பூங்கா பணி எப்போது நிறைவடையும் என்று தினமும் வந்து கேட்டு செல்கிறார்கள்.