சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும், ஹரிணி(14) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பாலாஜி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி பாலாஜி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலாஜி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. எனது இஷ்டத்துக்கு வாழ விடுவதில்லை. 30 வயதிற்கு மேல் திருமணம் ஆகி வேலைக்கு சென்ற பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா? உயிருடன் இருந்து என்ன பண்ண போகிறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும் என உருக்கமாக எழுதியுள்ளார். இந்நிலையில் ஜே.இ.இ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த பாலாஜி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.