2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி இப்போதே தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் களம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை, கட்சியின் மாநில மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடலூர் அல்லது கன்னியாகுமரி மாவட்டங்களில் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேச்சுகள் அடிபடும் நிலையில், “தொகுதியை முடிவு செய்துவிட்டேன், அதை மாநாட்டு மேடையில் அறிவிப்பேன்” என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை சீமானை ஒரு வலுவான தொகுதியில் களம் இறக்கி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.