தமிழகத்தில் தங்கம் விலை நேற்று அதிரடியாகச் குறைந்த நிலையில் இன்று மீண்டும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலையில் ரூபாய் 640 குறைந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 2080 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் 260 ரூபாய் அதிகரித்து 14,680 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 17,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று திடீரென ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது நடுத்தர மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தையில் நிலவும் சூழலால் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என நகை வியாபாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில் தங்கத்தின் விலை இவ்வாறு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையும் இதனுடன் இணைந்து உயர்ந்து வருவதால் ஆபரணங்கள் வாங்குவது தற்போது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.