19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சி  ஒளிபரப்பு அனுமதிக்க வேண்டும். அதேபோல காலை 9 மணி என்பதை 7. 00 மணிக்கு அனுமதிக்க வேண்டும் என  படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன்  நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

நாங்கள் ஒரு நாளைக்கு ஆறு காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் ஐந்து காட்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள், இடைவெளி மற்றும் இன்னும் பிற நிகழ் நிகழ்வுகள் எல்லாம் சேர்த்து ஒரு காட்சிக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும். எனவே ஐந்து காட்சிகள் என்றால் 18 மணி நேரம்  45 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.

மீதம் இருக்கக்கூடிய நேரத்தை கணக்கில் வைத்துக்கொண்டு நாங்கள் ஆறு காட்சிகளாக திரையிடலாம். எனவே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  அதேபோல 19ஆம் தேதி அன்று 6 காட்சிகளுக்கு பதில் 5 காட்சிகளுக்கு தான் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வாதிடப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர்  சண்முகசுந்தரம் ஆஜராகி வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் தனது வாதத்தில்,  அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதேபோல ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதி அளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய மதுரை கிளையில் ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு,  அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி,  இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கலாமா ? என்று ஒரு யோசனை கூறினார். அதற்கு பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் இரு நீதிபதி அமர்வுக்கு சென்றால் ? வழக்கு விசாரணை காலதாமதம் ஆகும்.

படம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே மனு காலாவதியாகி கூட ஆகிவிடும். எனவே நீங்களே விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிங்கள் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.  அப்போது நீதிபதி, அந்த வழக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டதா ? பட்டியலிடப்பட்டு விட்டதா ? எப்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது ? என கேட்டதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் நாளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கானது நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த்  தெரிவித்திருக்கிறார். அப்பொழுது அந்த வழக்கினுடைய நிலவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றமா ? அல்லது இந்த  நீதிபதி விசாரிப்பாரா ? என்று நாளைக்கு தெரியவரும். இந்த நிலையில் இந்த வழக்கினுடைய விசாரணையானது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.