லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டவர்கள்   நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முன்னதாக லியோ பட குழு தரப்பு நிறுவனம் அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7.00 மணிக்கும்,  20 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை காலை 7. 00 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான சில அறிவுரைகளையும் வழங்கியிருந்தது.

அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லியோ சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளருக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

அதில் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டுமே என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரைப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறப்பு காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் லியோ படத்தை திரையிட காலை நான்கு மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும்.  அதேபோல காலை 9 மணி என்பதற்கு பதிலாக காலை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும். அதேபோல் இடைவெளி இன்னும் பிற நிகழ்வுகள் எல்லாம் சேர்த்து 1 காட்சிக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.  ஐந்து காட்சிகள் என்றால் 18 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. மீதம் இருக்கக்கூடிய நேரத்தை கணக்கில் வைத்து நாங்கள் 6 காட்சி திரையிடலாம் என அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி,  அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிபதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. எனவே 4  மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வாதிட்டார். அதே போல் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு விட்டதா ? இரண்டையும் சேர்த்து விசாரிக்கலாமா ? அது எப்போது பட்டியலிடப்பட்டுள்ளது ? சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட விவரங்களை அரசு வழக்கறிஞரிடம் கேட்டார். அரசு சார்பில் நாளை பதில் தெரிவிப்பதாக சொன்னதை அடுத்து இந்த வழக்கை நாளை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.