ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 55 முதல் 66 இடங்களில் வெற்றிபெறும் என்றும், பாஜக கட்சி 18 முதல் 24 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இது டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்த நிலையில் 10 ஆண்டுகளாக  மக்கள் பாஜக ஆட்சியில் அதிருப்தியில் இருப்பதால் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று  ஜம்மு காஷ்மீரிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 46 முதல் 50 இடங்களை வெல்லும் எனவும், பாஜக கட்சி 23 முதல் 27 இடங்களை வெல்லும் எனவும் மற்ற கட்சிகள் 3 முதல் 4 இடங்களை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தியதில் தெரிய வந்துள்ளது. மேலும் இதேபோன்று NDTV நடத்திய கருத்துக்கணிப்பிலும் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.