தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் ஆகியும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதும் இவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.

கிராம மக்களின் இந்த அதிரடி முடிவால், வேங்கைவயல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், “குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தங்களது முடிவில் மாற்றமில்லை” என்று கூறி மக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கைவயல் கிராமத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதேபோன்று நாங்குநேரி பெரும்பத்து பகுதியிலும் இரட்டை கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்த பகுதியிலும் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.