தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 40 பேர் உயிரிழந்தனர். நடிகர் விஜய் கிளம்பிய பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் விசாரணை குழு அமைத்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கூட்டத்தின் போது குளறுபடி நடந்துள்ளதாகவும் கல்வீச்சு நடந்ததாகவும் சதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்பட இருக்கும் நிலையில் தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் இது தொடர்பாக பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம். ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு மற்றும் பாலம் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என்று நாங்கள் விளக்கம் கொடுத்தோம்.
அவர்கள் கேட்ட உழவர் சந்தை பகுதியும் மிகவும் குறுக்களான இடம். அதனால் தான் அண்மையில் மற்றொரு கட்சி கூட்டம் நடத்திய வேலுச்சாமி புறத்தை பரிந்துரை செய்தோம். அங்கு பத்தாயிரம் முதல் 15000 பேர் வரை கூடினர். அதனை தமிழக வெற்றிக்கழகத்தினரும் ஏற்றுக்கொண்டு மனு கொடுத்தனர். மேலும் கரூரில் நடிகர் விஜய் பேசும்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மின்தடையும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்று கூறினார்.
