தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி முகமாக அறியப்பட்டவர் அஜிதா ஆக்னல். இவர் தமிழக வெற்றிக்கழகத்திற்காக தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த கட்சிக்காக மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு நலப்பணிகளையும் செய்து வந்தார். இதற்கிடையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டபோது அஜித்தாவுக்கு பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பனையூருக்கு தன் ஆதரவாளர்களுடன் சென்ற அவர் விஜயின் காரை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டது தலைப்பு செய்திகளாக மாறியது.

அதன் பிறகு மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று நலமடைந்த அவர் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில் தனக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை எனவும் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்திற்காகவும் விஜய்க்காகவும் உழைப்பேன் எனக்கூறி மீண்டும் தூத்துக்குடியில் தன்னுடைய களப்பணிகளை தொடர்ந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போது அஜித்தாவுக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடியில் நடிகர் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்‌. மேலும் இதனால் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது அஜிதா தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகி தூத்துக்குடி எம்பி கனிமொழி முன்னிலை திமுகவில் அதிகாரப்பூர்வமாக தன் ஆதரவாளர்களுடன் இணைந்தார். இது தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.