தமிழக அரசியலில் நிலவும் இழுபறி நிலைக்கு இடையே, அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான 34 எம்.எல்.ஏ-க்கள், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்துவிட்டு, சி.வி. சண்முகம் தலைமையில் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சியின் தொடர் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் செயல்பட அதிருப்தி தெரிவித்துள்ள இவர்கள், மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த ரகசியக் கூட்டத்தின் முடிவில், 34 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடிதத்தை சி.வி. சண்முகத்திடம் வழங்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதரவுக் கடிதத்துடன் சி.வி. சண்முகம் இன்று தவெக தலைவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது அதிமுகவின் ஒரு பகுதியினரும் கை கொடுத்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விரிசல் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
