திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான முசிறியில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் களம் சூடுபிடித்தது முதலே மற்ற வேட்பாளர்களுக்கு கடும் சவால் விடுத்து வந்த அவர், வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றிலும் தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு வெற்றியைத் தன் வசமாக்கினார்.

மாற்றத்தை எதிர்நோக்கிய முசிறி தொகுதி மக்கள், நடிகர் விஜய் தலைமையிலான தவெக மீது வைத்த நம்பிக்கையை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

திராவிடக் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட விக்னேஷ் வாகை சூடியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், முசிறி தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.