தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஜூன் 5-ஆம் தேதிக்கு மாற்றலாமா என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், துறைச் செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், நாளை மறுநாள் (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
