தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுமத்தியுள்ள “குதிரை பேரம்” புகார் அரசியல் களத்தில் பெரும் வெடியைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கடிதம் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, “எனது கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்கிறது; தற்போது அவரைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை” என தினகரன் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து அவசரப் புகாரையும் அளித்துள்ள அவர், விஜய் தரப்பு அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகச் சீறியுள்ளார். 118 என்ற மேஜிக் நம்பரைத் தொட இன்னும் 2 இடங்களே தேவைப்படும் நிலையில், தவெக-வின் இந்தப் புதிய “ஆபரேஷன் மன்னார்குடி” விவகாரத்தால் நீலாங்கரை முதல் கோட்டை வரை பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளதுடன்,  தமிழகமே திக் திக் நிமிடங்களில் உறைந்து போயுள்ளது.