பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் இயற்கை விவசாய நிலம் வாங்கியதாக சமூக வட்டாரங்களில் பரவிய தகவல்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் வழங்கியுள்ளார். தாம் நிலம் வாங்கிய செய்தி உண்மைதானெனவும், அந்தச் சொத்துக்கான தொகையை தம் மற்றும் மனைவியின் சேமிப்புத் தொகை மற்றும் கடன் மூலமாக செலுத்தியதையும், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சொத்து எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு கொண்டுள்ள ஆழ்ந்த விருப்பத்தின் அடிப்படையில், கடந்த ஜூலை 12, 2025 அன்று ஒரு விவசாய நிலத்தை நான் வாங்கியுள்ளேன். இந்த நிலம் என்னுடைய மற்றும் என் மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் மூலமாக வாங்கப்பட்டது. கடன் தொகைக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வருகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

“நிலம் பதிவு செய்யும் நாளன்று நான் உடனிருக்கவில்லை என்ற காரணத்தால் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், பதிவு செய்யும் உரிமை எனது மனைவி அகிலாவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வழங்கப்பட்டிருந்தது. ஜூலை 10 அன்று காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் இது சட்டப்படி செய்யப்பட்ட பதிவு,” எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலத்தின் பதிவு, முத்திரைத் தாள் உள்ளிட்ட அனைத்து அரசுக் கட்டணங்களுக்காக மொத்தமாக ₹40,59,220 செலுத்தியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இது எனது வாழ்க்கையில் வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து. இதை கொண்டு நான் ஒரு பால் பண்ணை நிறுவ, மத்திய அரசின் PMEGP திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். அது தற்போது பரிசீலனையில் உள்ளது. இது வருமான வரி அறிக்கையிலும் பதிவு செய்யப்படும்,” எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மேலும் தெரிவித்ததாவது: “இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தொழில் முனைவோர் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் நோக்கத்துடன் புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இது முழுமையாக சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் வணிக முன்னெடுப்பு. என் குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக மேற்கொள்ளப்படும் திட்டம்தான் இது.” மேலும்  “சிலர் வதந்தி பரப்புவது வலி தருகிறது. எனது அரசியல் பயணத்தில் நான் எப்போதும் நேர்மையாக இருந்தேன். இத்தகைய தவறான விமர்சனங்கள் குறித்து பதிலளிக்க நேரமின்றி இருந்தேன். ஆனால் இப்போது, உண்மையை பகிர விரும்புகிறேன்,” என கூறியுள்ளார்.