தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதேபோல், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பி.எல். சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார். அத்துடன், கட்சித் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள், கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் போன்றவை பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த மையக்குழு கூட்டம் பா.ஜ.க.வின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய திருப்பமாக அமையும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.