பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம், பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரழிவால் பல பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூகம்பத்தின்போது மக்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி பீதியுடன் தெருக்களில் ஓடிச் சென்றனர். பலர் இடிந்த கட்டிடங்கள் கீழ் சிக்கி உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்பு படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பூகம்பத்தால் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பலர் இன்னும் மாயமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாடு, அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு உள்ளாகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த 7.2 ரிக்டர் அளவிலான போஹோல் பூகம்பத்திலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் நினைவில் கொள்ளத்தக்கது.
தற்போது ஏற்பட்டுள்ள பூகம்பத்துக்குப் பின்னர் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
