வாஷிங்டன்: பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக முயற்சிகளில் காட்டிய ஈடுபாட்டை பாராட்டிய அவர், முக்கிய கனிமங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்களில் பொருளாதார ஒத்துழைப்பை ஆராய்வதில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆர்வத்தை வலியுறுத்தினார். “ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்காவின் சார்பாக எங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரூபியோ தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அமெரிக்கா–பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டிருக்கும் புதிய வெப்பமயமாதல், இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தகத்தைத் தாண்டி கச்சா எண்ணெய், கிரிப்டோகரன்சி மற்றும் அரிய பூமி தாதுக்கள் குறித்த ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்த நிலையில், அமெரிக்கா தலையிட்டு இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை குறைக்க முயன்றது. நிபுணர்கள் கூறுவதாவது, “இது வெறும் எண்ணெய் ஒத்துழைப்பை மட்டுமே குறிக்கவில்லை, அமெரிக்காவின் பொருளாதாரமும் பாதுகாப்புத் துறைகளுக்கும் அவசியமான கனிம வளங்களைப் பெறும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா–பாகிஸ்தான் உறவு தற்போது பொருளாதாரம், இராணுவம், மற்றும் புவிசார் அரசியல் ஆகிய தளங்களில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
