நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் நேற்று  நடைபெற்றது. இந்தக் காட்சிக்காக ஒரு கார் வேகமாக பறந்து கீழே விழும் காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஸ்டண்ட் காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) பங்கேற்றார். கார் மேலே பறக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவர், காருடன் கீழே விழுந்தபோது அதன் கீழே சிக்கி மயக்க நிலையில் இருந்தார். இந்ததை கவனித்த இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பா. ரஞ்சித்  உட்பட ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய  நால்வர் மீது அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஆபத்தான சூழலில் நடவடிக்கை எடுக்காமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் நேரில் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.