சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட கோர மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 588 பேர் மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை திபெத்தின் க்யிரோங் மாவட்டத்தில் உள்ள க்யிரோங் துறைமுகப் பகுதியில் திடீரெனப் பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான திடீர் வெள்ளப்பெருக்கு திபெத் எல்லைப் பகுதியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்த விபத்தில் 220 பேர்  உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 588 பேர் மாயமாகியிருப்பதாகவும் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பேரழிவு அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய உயிரிழப்புகள் மற்றும் சேதங்களைக் கருத்தில் கொண்டு, மாயமானவர்களைத் உடனடியாகத் தேடி மீட்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள சீனா அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சாலைகளைச் சீரமைத்தல், பேரிடர் பாதிப்புகளை மதிப்பிடுதல், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றுதல் போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மேலும், விமானப்படை, அவசர மருத்துவக் குழுக்கள், போக்குவரத்து மற்றும் பொறியியல் பிரிவினரும் எத்தகைய சவாலான சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோரப் பேரழிவினால் திபெத் – நேபாள எல்லைப் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உதவி பெறுவதற்கான அவசரத் தொடர்பு எண்களை இந்தியத் தூதரகம் நேற்று உடனடியாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது நேபாள வெள்ளத்தில் சுமார் 300 இந்தியர்களை காணவில்லை எனவும், 165 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் உட்பட 466 வெளிநாட்டினர், 116 நேபாளிகள் என மொத்தம் 579 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தகவல் வெளியிட்டுள்ளது.