அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டா நகரில், முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஏஞ்சலின் “ஆங்கி” மாக், தனது 80 வயது தாயார் அனிதா அவர்ஸை கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஹாலோவீன் தினத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு போலீஸார் அங்கு சென்றபோது, மாக் வீட்டுக்கு வெளியே கைகளில் காயங்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் அவரது தாயார் படுக்கையில் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விசாரணையின்போது மாக் கூறிய தகவல்கள் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று தனது தாயாரின் அறைக்குச் சென்றபோது, அவர் கத்தியை வைத்திருந்ததாகவும், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் மாக் கூறியுள்ளார். தன்னைத் தாக்கியதாக நம்பிய அவர், தற்காப்புக்காக எதிர்த்து செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது தாயார் முன்பு இருந்த நபர் போல இல்லை என்றும், அவர் “பிசாசு” என தாம் நம்பியதாகவும் போலீஸாரிடம் கூறியதாக வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின் பின்னணியில் அவரது மனநலப் பிரச்னைகள் குறித்தும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாக்கின் மாற்றாந்தந்தை பாரி அவர்ஸ், அவருக்கு மனநலக் கோளாறு இருப்பதாகவும், கடந்த காலங்களில் குழப்பமான நம்பிக்கைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தன்னைச் சுற்றியுள்ள சிலர் உண்மையான மனிதர்கள் அல்ல என்றும், அவர்கள் இயந்திரங்கள் போன்றவர்கள் என்றும் அவர் முன்பு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில நேரங்களில் தன்னை ஆன்மிக நபராகக் கருதியதாகவும், கடவுளுடன் பேசுவதாகக் கூறியதாகவும் அவரது மாற்றாந்தந்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் அவரது நடத்தை தொடர்பாக போலீஸார் தலையிட்டு, அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இருந்ததாக வழக்கு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தாயும் மகளும் பொதுவாக நெருக்கமான உறவில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மாக்கின் மனநிலை தொடர்பாக நீதிமன்றத்தில் பல மாதங்கள் விசாரணை நடைபெற்றது. முதலில் அவர் வழக்கை எதிர்கொள்ளும் அளவுக்கு மனநிலையில் இல்லை என நீதிமன்றம் கருதியதால் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரது மனநிலை வழக்கை எதிர்கொள்ளும் அளவுக்கு இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தது. இதையடுத்து, விசாரணையை எதிர்கொள்வதற்குப் பதிலாக முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டை மாக் ஒப்புக்கொண்டுள்ளார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்; 25 ஆண்டுகளுக்குப் பிறகு பரோல் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை அக்டோபர் 5, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது.