தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், நாளை (நவம்பர் 10) மாலை 5 மணி முதல் முழுமையாக நிறுத்தப்படும் என 7 தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
கேரளா மற்றும் கர்நாடகா போக்குவரத்துத் துறைகள் திடீரெனப் பேருந்துகளைப் பிடித்து, ‘இரட்டிப்பு வரி’ மற்றும் அபராதமாக ரூ. 1.85 கோடி வசூலித்துள்ளதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்’ (AITP) விதியின்படி, தமிழ்நாட்டில் பிற மாநிலப் பேருந்துகளிடமிருந்து சாலை வரி வசூலிக்கப்படுவதால், அதே வரியை அண்டை மாநிலங்களும் வசூலிப்பதாகக் கூறியுள்ளன. இதனால், பேருந்து உரிமையாளர்கள் வருடத்துக்கு ரூ. 4.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மேலும், இரு மாநிலப் பேருந்துகளுக்கும் சாலை வரி விலக்கு அளித்து, போக்குவரத்துச் சேவைகள் சீராக நடைபெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
