தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று (நவம்பர் 10) முதல் ஓடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்த திடீர் முடிவுக்குக் காரணம், ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்’ (AITP) அனுமதி கொண்ட பிற மாநிலப் பேருந்துகளுக்கு தமிழ்நாட்டில் சாலை வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை மாநிலங்களும் பதிலுக்கு வரி வசூலிப்பதேயாகும். இதனால், பேருந்து உரிமையாளர்கள் இரட்டிப்பு வரி மற்றும் அதிக அபராதங்கள் செலுத்த வேண்டிய சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக, அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து மாநிலப் பேருந்துகளுக்கும் சாலை வரி விலக்கு அளித்து, மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் சீராக நடைபெற வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.