பெங்களூருவில், ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் லோகேஷ் என்பவர், 20 வயதுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சர்ச் ஸ்ட்ரீட்டில் இருந்து சுதாமானகர் பகுதிக்குச் சென்றபோது, பைக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டே தன் கால்களைத் தொட முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்ட பிறகுதான், சமூக ஊடகங்கள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனடியாக வில்சன் கார்டன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரைக் கைது செய்து, பாலியல் தொல்லை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

​அந்தப் பெண் தனது பதிவில், அந்த ஓட்டுநர் நிறுத்தாமல் அத்துமீறியதால் தான் பயத்தில் உறைந்துவிட்டதாகவும், அந்த இடம் தெரியாததால் பைக்கை நிறுத்தச் சொல்லத் துணியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இலக்கை அடைந்ததும், தன்னைப் பார்த்து ஒரு வழிப்போக்கர் அந்த ஓட்டுநரைக் கண்டித்ததாகவும், ஆனால் ஓட்டுநர் மன்னிப்புக் கேட்டாலும் கிளம்பும்போது விரலைக் காட்டி மிரட்டியதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த மத்தியப் பிரிவு துணை ஆணையர், அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு, அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தார்.

​போலீஸார் கைது செய்த ஓட்டுநர் லோகேஷ், தனக்குப் பின்பக்கம் வலி இருந்ததாகவும், அதைத் தேய்க்க முயன்றபோதுதான் அப்படி நடந்துவிட்டதாகவும் கூறி சமாளித்துள்ளார். ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரியப் பயிற்சி பெற்று வரும் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம், ஆப் அடிப்படையிலான வாகனச் சேவைகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.