தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சி சார்பில் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த மார்ச் 30, 2026 அன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, ஆதவ் அர்ஜுனாவின் மனுவுக்கு சுயேச்சை வேட்பாளர் முரளி வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பெயரில் உள்ள சில நிறுவனங்களின் பெயர்களை வேட்புமனுவில் முறையாகக் குறிப்பிடவில்லை என்று புகார் எழுப்பப்பட்டது. வேட்புமனுவில் சொத்து மற்றும் தொழில் சார்ந்த விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காதது தேர்தல் விதிமீறல் என முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் புகாரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளருக்கே இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளதால், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தொண்டர்கள் இடையே பதற்றம் நிலவுகிறது. இது குறித்து உரிய விளக்கங்களை அளித்து, மனுவை மீண்டும் பரிசீலனைக்குக் கொண்டு வர தவெக தரப்பில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று மாலைக்குள் விரிவான விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே, அவரது மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியவரும்.,மேலும் நடிகர் விஜயின் வேட்பு மனு பெரம்பூர் தொகுதியில் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.