தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 30) அவர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கவலைக்குள்ளாகும் நிலையில், அவரது உடல்நிலை விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.