சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவின் இறுதிக்கட்டத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது.

அதாவது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (2026) வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எனினும், 6 மணிக்கு முன்னதாகவே வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியை திமுகவினர் கைப்பற்ற (Booth Capturing) முயன்றதாகப் TVK கட்சியினர்  புகார் தெரிவித்தனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து, தவெக வேட்பாளர் சினோரா அசோக் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும், சினோரா அசோக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் இந்த மோதல் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.