மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குத் திடீரென யானை ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கிராம் ஜிட்டுசோல் ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வெளியே இந்த யானை உலா வந்ததைக் கண்ட வாக்காளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

யானையைப் பார்த்ததும் சிலர் பீதியில் ஓடத் தொடங்கினர், ஆனால் பல இளைஞர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்கக் குவிந்ததால் அந்த இடமே பரபரப்பானது. மேற்கு வங்கத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுமார் 25 வாக்குச்சாவடிகள் ‘ஆபத்தானவை’ என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தன. இதில் ஜார்கிராம் மாவட்டத்திலேயே 60 சதவீத இடங்கள் உள்ளன.

இதற்காக வனத்துறையினர் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையிலும், இந்த யானை வாக்குச்சாவடி அருகே வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை மற்றும் யானை நடமாட்டத்திற்கு மத்தியிலும் ஜார்கிராமில் 43.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதியும், முடிவுகள் மே 4-ஆம் தேதியும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.