வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து பழனி அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டார்.
அப்போது, திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஜூன் 26-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில், ஆம்பூரில் உள்ள சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் காயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள், 7 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. 4 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் தொடர்புடைய 191 பேருக்கு எதிராக 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வேலூர், கடலூர், சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த 26-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி மீனாகுமாரி வழக்கை ஒத்திவைத்து, இன்று (28-ம் தேதி) தீர்ப்பு அளித்தார்.
அதன்படி, 7 கட்டங்களாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 6 கட்ட வழக்குகளில் தொடர்புடைய 161 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் முதல் பிரிவில் 26 பேர், இரண்டாவது பிரிவில் 35 பேர், மூன்றாவது பிரிவில் 34 பேர் என மொத்தம் 161 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ. இஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் அவரது சொத்துகளை அரசு பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
