சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மூடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கி, 8-ம் தேதி அதிகாலை 2.25 மணி வரை நீடிக்கும் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் நடைபெறும் மிக நீண்ட சந்திர கிரகணங்களில் ஒன்றாகும். முழு சந்திர கிரகணத்தின் உச்ச கட்டமான நேரம் இரவு 11.41 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை இந்தியா முழுவதும் எந்த கருவிகளும் இல்லாமல் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். குறிப்பாக சென்னையிலும் கிழக்கு நோக்கி வானத்தை நோக்கியாலே முழு சந்திர கிரகணத்தை காண முடியும். கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்குக் காரணம் ரேலீ சிதறல் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை பொதுவாக “ரத்த நிலவு” (Blood Moon) என்றும் அழைப்பர். இந்த வான நிகழ்வை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் துருவப் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள மக்கள் விரிவாகக் காணலாம். உலக மக்களின் 87% பேர் இதன் குறைந்தது ஒரு கட்டத்தையாவது காண வாய்ப்பு பெறுகின்றனர்.

அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும், அதைப் பார்ப்பதற்கு இந்தியாவில் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் எனவும் வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறும் இந்த கிரகணத்தை தவறவிடாமல் காண பொதுமக்கள் தயாராக இருக்கலாம்.